கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் சிலர் மோதிக்கொண்டனர். அதில் மாணவர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் மோதலை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காயம் அடைந்த மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விடுதி வார்டன் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்டித்தனர். இந்த மோதல் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் விடுதியில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் நெல்லையை சேர்ந்த துரையரசன் (19), தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் (20), தென்காசியை சேர்ந்த உதயகுமார் (20) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.