மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-டிவிஷனில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பில்லூர் அணை என 5 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளும், சிறுமுகை, பில்லூர் அணை ஆகிய பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளின் வழியாக நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால், வளைவுகளில் திரும்பும் போதும், வாகனங்களை முந்தி செல்லும் போதும், எதிரே வரும் வாகனங்களிலோ அல்லது முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனங்களிலோ மோதி விபத்துக்கு உள்ளாகின்றனஇதில் உயிரிழப்பும், அதிக அளவில் காயமும் அடைகின்றனர்.
மேட்டுப்பாளையம் சப்- டிவிஷனில் உள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை, 290 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். 88 பேர் சம்பவ இடத்திலேயும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் இறந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் நேற்று (அக்.,16) கூறியதாவது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக நிதானம் இல்லாமல் ஓட்டுகின்றனர். அதில் சிலர் வாகனங்களை ஒட்டி செல்லும்போது சாகசம் செய்கின்றனர். மது போதையில் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.