கோவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், தினமும் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில், நம்மாழ்வார், ராமானுஜர், திருநங்கை ஆழ்வார் ஆகியோருக்கு முதலில் சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அரங்கநாத பெருமாள், வேத மந்திரங்கள் முழங்க பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.