கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கடந்த இரு நாட்கள் பெய்த மழையால் மழை நீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகல் முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவையிலிருந்து உதகை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. சில இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.
மேலும், பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாலமா அல்லது தொட்டிப்பாலமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மேம்பாலத்தில் மழை நீர் தேங்குவது புதிதல்ல. ஒவ்வொரு மழை பெய்யும் போதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.