கோவையில், மதுக்கரையைச் சேர்ந்த 40 வயது என்ஜினீயர் கதிரேசன், பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கதிரேசன், சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்திருந்தார். ஒப்பணக்கார வீதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்தபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கதிரேசன் மீது, அதே சமயம் அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.