மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று பவானி ஆற்றில் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிக்கினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டார்னிங்டன் பகுதியைச் சேர்ந்த சசி (38) என்ற பெயிண்டர், தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளின் கிளட்ச் வயர் அறுந்துவிட்டது. அப்போது அவ்வழியே வந்த இளைஞர்கள் மூவர் உதவி செய்தனர். பின்னர் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். சசி பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு மிரட்டினர். வாக்குவாதத்தின் போது, சூர்யா என்ற இளைஞர் கத்தியால் சசியை குத்தினார்.
பின்னர் அவர்கள் தப்பிச் சென்றனர். சசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சூர்யாவை (21) போலீசார் தேடி வந்தனர். இன்று மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் அவரைக் கண்டுபிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற சூர்யா, பவானி ஆற்றில் குதித்தார். குதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.