கோவை: வீட்டு கடனுக்கு கூடுதல் வட்டி வசூலித்தது முறையற்ற செயல்
கோவை மதுக்கரை, மேட்டுங்காடு பகுதியை சேர்ந்த பனிமலர் என்பவர், கோவை அவினாசி ரோட்டிலுள்ள ஐ.ஐ.எச்.எப்.எல் என்ற நிறுவனத்தில், கடந்த 2018ல், 7.18 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினார். மாத தவணையாக 8857 ரூபாய் வீதம் 180 மாதங்கள் திரும்ப செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. தவணை முறையாக செலுத்தி வந்த நிலையில், இந்த நிறுவனம், வேறு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதாக கூறி, எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு, தவணை காலத்தை 235 மாதங்களாக அதிகரித்தனர். மாத தவணை தொகை 6143 ரூபாயாக மாற்றப்பட்டது. கடன் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மாற்றியதோடு வட்டியும் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது குறித்து பனிமலர் முறையிட்ட போது, உரிய பதில் அளிக்காமல் கடன் தவணை தொகை செலுத்துமாறு வற்புறுத்தி வந்தனர். இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், எதிர்மனுதாரர் கூடுதல் வட்டி நிர்ணயித்தது முறையற்ற வணிக நடைமுறை என்றும் எனவே, புகார்தாரருக்கு இழப்பீடாக, 10000 ரூபாய், வழக்கு செலவு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.