கோவை: காப்பீடு திட்டம்-விவசாயிகளுக்கு அழைப்பு!
கோவை வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ராபி பருவத்தில், மக்காச்சோளம், சோளம், மற்றும் கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு வட்டார அளவில் அறிவிப்பு செய்யப்பட்டு, அதனைச் சார்ந்து வரும் அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சேர, ராபி பருவ மக்காச்சோளம், மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மேலும் சோளம் பயிருக்கு டிசம்பர் 16ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், பொது இசேவை மையங்கள் வாயிலாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். விவசாயிகள் காப்பீடு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.