பீளமேட்டில் மரத்தில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு
கோவை ஆர்ஜி புதூர் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் மீராமைதீன் மகன் நைனா முகமது (26). எலக்ட்ரீஷியன். திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடைய இவர் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய அவரது தாய் சாராபீபி, நைனா முகமது செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று சின்னியம்பாளையம் ஆர்ஜி புதூரில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் லுங்கியில் நைனா முகமது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரது தாய் சாராபீபிக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர் தனது மகனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், வாழ்க்கையில் விரக்தியடைந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.