கோவை: நிதி நிறுவனம் துவங்குவதாக மோசடி

74பார்த்தது
கோவை: நிதி நிறுவனம் துவங்குவதாக மோசடி
கோவை, கணபதியை சேர்ந்தவர் ராதாமணி (44). இவரின் மகன் சுமேஷ் மாதவ் (22). சுமேஷ் பி.காம் படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கு நவீன் குமார் (24) மற்றும் யுகன் (21) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன், யுகன், நவீன் ஆகியோர் ராதாமணியிடம் சென்று, தாங்கள் இருவரும் நிதி நிறுவனம் ஆரம்பிக்க உள்ளதாகவும், ரூ. 50 லட்சம் முதலீடு செய்தால் சுமேஷையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்வதாகவும், வரும் லாபத்தில் ஒரு பங்கை சுமேஷ் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதை நம்பி ராதாமணி கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு தவணைகளாக 35 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும், ஜூன் மாதம் முதல் லாப பணத்தை கொடுக்கவில்லை. இது குறித்து ராதாமணி கேட்டபோது, நிறுவனம் துவங்குவதில் சிறு பிரச்னை இருப்பதாகவும், சில நாட்களில் சரி செய்து விடுவோம் எனவும் தெரிவித்தனர். 

சந்தேகம் அடைந்த ராதாமணி இருவர் குறித்து விசாரித்தபோது, அவர்கள் ராதாமணியை ஏமாற்றி பணம் பெற்றதும், அந்த பணத்தை வைத்து கார் வாங்கி சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் கேட்டபோது பணம் தர முடியாது என மிரட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக ராதாமணி, சரணவம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் யுகன் மற்றும் நவீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி