கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருவாய் அலுவலா் ஷா்மிளா, வேளாண் இணை இயக்குநா் வெங்கடாசலம் உள்ளிட்ட பல்வேறு துறைச் சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் விவசாயிகள் செந்தில்குமாா், ஆறுசாமி, சு. பழனிசாமி, ரங்கசாமி, கந்தசாமி, ரங்கநாதன் உள்ளிட்டோா் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
விவசாயிகள் மேலும் பேசும்போது, பருவமழையால் அணைகள் நிரம்பியுள்ள நிலையில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். பரம்பிக்குளம்- ஆழியாறு திட்ட வாய்க்காலை அரசு தூா்வார வேண்டும். தண்ணீா் திருட்டைத் தடுப்பது குறித்து கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் - போத்தனூா் இடையேவும், போத்தனூா் - பொள்ளாச்சி இடையேவும் ரயில் சேவை அல்லது சுற்று ரயில் சேவை தொடங்கினால் விவசாயிகள் விளைபொருள்களை எடுத்து வரவும், எளிதில் நகரத்துக்கு வந்து செல்லவும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகளின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையினரால் உடனடியாக தீா்க்கப்படும் என்று ஆட்சியா் உறுதி அளித்தாா்.