கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார்(41). வழக்கறிஞர். இவர் தனது மனைவி, 5 வயது மகளுடன் நேற்று முன்தினம் கோவை ரயில் நிலைய ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பிரவீன் குமாருக்கு செல்போன் அழைப்பு வந்ததால் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு கை கழுவ சென்றார். குழந்தையை நிற்க கூறிவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டார். அப்போது அவரது குழந்தையை 2 பேர் கடத்த முயற்சித்ததாக தெரிகிறது. இதனைப்பார்த்த அவரது தந்தை பிரவீன் குமார் சத்தம் போட்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (30), பத்மநாபன் (30) என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் அவர்கள், சிறுமி ஓட்டலில் கை கழுவ முடியாமல் நின்றிருந்ததாகவும், உதவும் எண்ணத்தில் தண்ணீர் குழாயை திறந்து கை கழுவ சிறுமியை தூக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.