பீளமேட்டில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து

74பார்த்தது
பீளமேட்டில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
கோவை, பீளமேட்டை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் பீளமேடு பயனியர் மில் அருகே கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் நவீன் (20). தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3ம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நவீன் அவரது நண்பர் விஜய் என்பவருடன் தந்தையின் கடைக்கு சென்றார். கடை முன்பு சில வாலிபர்கள் நின்று இருந்தனர். அவர்களிடம் நவீன் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? என கேட்டார். 

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நவீன் பீளமேடு பகுதியில் நின்றிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல் மீண்டும் நவீனிடம் தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சீனி என்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை குத்தினார். மற்ற 3 பேரும் சேர்ந்து நவீனை தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். 

இந்த தாக்குதலில் நவீனுக்கு கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில் நவீனை தாக்கியது பீளமேடு பகுதியை சேர்ந்த சீனி, சிவா, கார்த்திக் மற்றும் ரோஹித் என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி