கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வந்த கார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பால்காரன் சாலையில் மரத்தில் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ஐந்து பேர், சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை கட்டுப்படுத்த இயலாமல் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் வெங்கடாதிரி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகேஷ் குமார், துரைசாமி மற்றும் கார் ஓட்டிய சுவாமி ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.