கோவை: வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் கூட்டமாக வந்த யானைகள்

80பார்த்தது
கேரள மாநிலம், கொடுங்கலூரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், நேற்று சாலக்குடி வழியாக வால்பாறைக்கு பைக்கில் வந்தபோது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஆனைக்காயம் என்ற இடத்தில் பெரும் ஆபத்தை சந்தித்தனர். யானைகள் கூட்டமாக வருவதைக் கண்ட அவர்கள், ஆர்வ மிகுதியால் அவற்றின் வீடியோவை எடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானைகள் அவர்களை விரட்டத் தொடங்கின. அதிர்ஷ்டவசமாக, இருவரும் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த அதிரப்பள்ளி வனத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர், பைக்கில் வந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வனத்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி