கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் எஸ். ஐ. எச். எஸ். காலனி அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடைப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் யார்? என தெரியாததால் அக்கப் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது தண்டவாளம் அருகில் ஒரு மணி பர்சும், ஏடிஎம் கார்டும் கிடந்தது. அதன் மூலம் கோவையில் உள்ள வங்கியை தொடர்பு கொண்டு கணக்கு வைத்திருப்பவர் பெயரை சரி பார்த்தனர். அப்போது இறந்த வாலிபர் கோவை சௌரி பாளையத்தை சேர்ந்த அஸ்வின் குமார் (22) என்பது தெரிய வந்தது. அவர் இன்று காலை காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு செல்போனில் பேசியபடி சென்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி அவர் இறந்தது தெரிய வந்தது. அஸ்வின் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காதில் இயர் போனை மாட்டி கொண்டு பேசியபடி சென்ற வாலிபர் ரயில் மோதி இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.