கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சுந்தராஜ் மகன் கார்த்திகேயன்(18). இவர் அங்குள்ள சரோஜினி ரோட்டில் உள்ள டூ-வீலர் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சிபு(30) என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதனையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிபு உட்பட 2 பேர் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் பேசி கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கினர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திகேயனை தாக்கியது சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியை சேர்ந்த சிபு(30), மற்றும் அவரது நண்பர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த ரெஷித்(25) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.