கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இன்று (ஜனவரி 3) அதிகாலை எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் இருந்து டேங்கர் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி, கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தை கடந்து காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த கேஸ் நிரம்பிய டேங்கர் கழன்று விழுந்து சேதமடைந்ததால் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, லாரி ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பு கருதி மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து மாற்று வழியில் திருப்பி விட்டுள்ளனர்.
கேஸ் முழுமையாக வெளியேற்றப்பட்டு அல்லது தண்ணீரில் கலக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கேஸ் நிறுவன பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.