கோவை: தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 13 எரிவாயு மின் மயானங்களை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது. இந்த மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஈஷாவிற்கு விருது வழங்கப்பட்டது.
கோவை கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாகினி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் TTS மணி அவர்களின் நினைவாக இவ்விருது ஈஷாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை ஈஷா சார்பில் சுவாமி உன்மதா, சுவாமி சிதாகாஷா மற்றும் சுவாமி கைலாசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம், இருகூர் ஆகிய இடங்களிலும், சென்னை மற்றும் தஞ்சாவூரிலும் அமைந்துள்ள மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.
இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குவதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஈஷா யோக மையம் ஈடுபட்டு வருகிறது.