இரிடியம் தருவதாக ரூ. 2 கோடி மோசடி

78பார்த்தது
இரிடியம் தருவதாக ரூ. 2 கோடி மோசடி
RS புரம்: கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்(55). இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அபுபக்கர் என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்று தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். கோவையில் உள்ள சிலர் அஜீஸ் நிலத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, அவர் அழைத்ததால் அஜீஸ் கோவை வந்து அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அதில் ஒருவரான ஜான் பீட்டர் தன்னிடம் சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாக தெரிவித்து, அதை வாங்கி விற்றால் 10 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என அஜீசுக்கு ஆசை காட்டினார். அப்போது பானை ஒன்றை காட்டி அதற்குள் அந்த சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாகவும் அதை திறந்து பார்த்தால் சக்தி போய்விடும் என்றும் கூறினர். இதையடுத்து அபுபக்கர், ஜான் பீட்டரிடம் 2 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் அஜீஸ், பணத்தை பெற்ற அவர்கள் இரிடியத்தை தரவில்லை. பணத்துடன் மாயமாகினர்.

இது குறித்த புகாரில் RS. புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில் இதில் தொடர்புடைய உடுமலையை சேர்ந்த அனில் குமார்(30) ஜோதிராஜ்(34), ஊட்டியை சேர்ந்த உத்தமன்(45), கோவை சசிகுமார்(47), ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி