ஸ்ரீ பம்பா வாச ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து உணவு பரிமாறி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். கோவை சாய்பாபா காலனியில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. முகமது ரஃபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்களும் தன்னார்வலர்களாக பங்கேற்று உணவு பரிமாறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பேசிய ஹாஜி. முகமது ரஃபி, தமிழ்நாடு அரசு வழங்கும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது தொகை 25 ஆயிரத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இந்த உயர்வு, மத நல்லிணக்க பணியில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் சமூக ஒற்றுமைக்கு பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.