கடந்த 2021ஆம் ஆண்டு, கோவையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அண்டை வீட்டில் வசித்த 44 வயதான சிவகுமரேசன் அவருடன் பழகி வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாத சிவகுமரேசன், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரிடம் பலமுறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது பெற்றோர் அவரை துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவகுமரேசனை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளி சிவகுமரேசனுக்கு போக்சோ சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 20000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.