மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நீலகிரி வெள்ளைப்பூண்டு வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயத்தில், இந்த மார்க்கெட்டுகளுக்கு தினமும் 35, 000 முதல் 40, 000 மூட்டைகள் வரை வெள்ளைப்பூண்டு வரும். ஆனால், தற்போது நீலகிரியில் சீசன் முடிவடைந்துவிட்டதால், வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில், நீலகிரியில் இருந்து சுமார் 300 மூட்டை வெள்ளைப்பூண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சுமார் 2, 000 மூட்டை வெள்ளைப்பூண்டும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வந்தது.
தற்போது நீலகிரி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 120 வரையிலும், இமாச்சலப் பிரதேச வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 90 முதல் ரூ. 130 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரத்துக் குறைவு மற்றும் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.