கோவையில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவரை வரவேற்கும் விதமாக அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா அரங்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
இந்த அலங்காரங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்றும், இது போக்குவரத்திற்கும் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் அதிமுக பொறுப்பாளர் லட்சுமணன் மீது 4 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.