கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த பத்தாம் தேதி இரவு சுமார் 1 மணி அளவில், கெஜ முடி எஸ்டேட் லோயர் டிவிசன் பகுதியில் உள்ள குடியிருப்பு அருகிலான தேயிலை தோட்டத்திற்கு மூன்று காட்டு யானைகள் வந்தன. யானைகளின் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்களை அவை விரட்டி தாக்கின. இந்த சம்பவத்தில் சந்திரன் (62), உதயகுமார், கார்த்திக்கேஸ்வரி மற்றும் சரோஜா ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் இரவு சுமார் 2 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 17) அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.