கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று(அக்.2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க சில முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காதவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியானவர்கள். மேலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72, 000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உதவித்தொகை பெறுபவர்கள் தனியாரிடமிருந்து ஊதியமோ அல்லது அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் எந்த விதமான உதவித்தொகையும் பெறக்கூடாது என்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.