கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையிலான குழுவினர் நேற்று ஒரு முக்கிய மனுவை சமர்ப்பித்தனர். இந்த மனுவில், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாத் இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நசுருல்லாவின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைத்து அஞ்சலி செலுத்த முயற்சிப்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இஸ்ரேல் நாடு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நசுருல்லா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, காசா பகுதியில் பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸுக்கு எதிரான தாக்குதலிலும் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹவுதி இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் மீதும் இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தமிழக காவல்துறை இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.