இரவில் பனியும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 9,780 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், மலை நீரோடைகள் மற்றும் மழைநீர் குட்டைகள் தான் வன உயிரினங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக இந்த நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரிசெய்யும் பொருட்டு, வனத்துறையினர் வனப்பகுதி முழுவதும் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தினமும் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.