கோவையில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு உயர் ரக போதை மருந்து சப்ளை செய்த கென்யா நாட்டை சார்ந்த பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து செயல்பட்ட கும்பலை பிடிக்க, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய 6 பேரிடம் இருந்து 102 கிராம் மெதாம்பெட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடத்தி வந்து சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே என்ற பெண் என்று தெரியவந்தது. இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.