கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கி வரும் வேளையில், கோவையில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அகல்விளக்குகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், பூர்விகமாக மண்பாண்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், பானை, பொங்கல் பானை, அடுப்பு, பூந்தொட்டி, அகல்விளக்கு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விளக்கின் அளவுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், மண்ணெடுப்பதில் சிக்கல் நிலவி வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மண்ணெடுப்பதற்கு அரசு தடையில்லா சூழலை உருவாக்கும் பட்சத்தில் இந்தத் தொழில் தொடர்ந்து நடைபெறும் என்றும், இல்லையென்றால் நலிவடைந்துவிடும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.