கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று தமிழக பட்ஜெட் உரை ஒளிபரப்புவதற்காக பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் உரை ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு திடீரென்று ஒளிபரப்பானது. இதைக் கண்ட பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சீமான் பேச்சு நிறுத்தப்பட்டு, பட்ஜெட் தாக்கல் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்ஜெட் உரை ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு சீமான் பேச்சு ஒளிபரப்பானபோது, அங்கு இருந்த மாநகராட்சி மேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவிப் பொறியாளர் குமரேசன், மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி ஆகியோர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் விளக்கம் கேட்டு இன்று அவர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளார். மேலும், உதவி கமிஷனர் செந்தில்குமாரிடமும் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனிடையே, பந்தலூர் பகுதியில் பட்ஜெட் உரை நேரடி ஒளிபரப்பை மக்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.