ஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட பணத்திற்கான ரசீது, மற்றும் 2021 தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தக் கோரி கோவையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசே, ஏமாற்றாதே, என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இப்போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.