கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரி இன்று தெரிவிக்கையில், ஜனவரி 1 முதல் டோக்கன் வழங்கும் பணி துவங்க உள்ளது. பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், ஊழியர்கள் டோக்கன் கொடுத்து விடுவார்கள். ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.
மேலும், 70 சதவீத கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றார். கோவை மாவட்டத்தில் மட்டும் 1540 ரேஷன் கடைகள் மூலம் 11.42 லட்சம் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் ஆழியார் பகுதியில் உள்ள கடைகள் மூலம் பொருட்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரி மேலும் கூறுகையில், இலவச வேட்டி சேலைகள் 2 லட்சத்து 15 ஆயிரம் வந்துள்ளது. ஜனவரி 10ம் தேதிக்குள், அனைத்து கார்டுதாரர்களுக்கும் தொகுப்பு கொடுத்து முடித்து விடுவோம் என்றார்.