கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் நான்கு கூடுதல் சார்பு நீதிமன்றங்களில் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இங்கு, மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் ஏழு ஆண்டுக்கு குறைவான தண்டனைக்குரிய கிரிமினல் வழக்குகள், அதாவது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில், இந்த ஐந்து சார்பு நீதிமன்றங்களில் மொத்தம் 75 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், 32 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 10 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்களில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வருகிறார். அவர் பல வழக்குகளில் திறம்பட வாதாடி, குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளார். அவரது சிறப்பான பணியை பாராட்டி, நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.