சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்கள், பெண்கள் குறிப்பிட்ட இலக்காக மாறியுள்ளனர். கடந்தாண்டு பல்லடத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் இதற்கு உதாரணம். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின்படி, ரூரல் போலீசார் தோட்டத்து வீடுகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள், நாய் வளர்ப்பு போன்ற விவரங்களை சேகரித்து, பாதுகாப்பு குறித்த நோட்டீஸ்களை வழங்குகின்றனர். தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கதவுகள், ஜன்னல்கள் உறுதியாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்களை பார்த்தால் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.