கோவை நவய இந்தியா பகுதியில் செயல்படும் ப்ளூ டைமண்ட் கேபிடல் என்ற தனியார் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பல பேரிடம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்களான வீடர் மாத்தியூ மற்றும் தங்கமணி ஆகியோர், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். ஆரம்பத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் சேர்த்து கூடுதல் பணம் வழங்கி வந்த நிலையில், கடந்த ஓராண்டாக எந்த தொகையும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ப்ளூ டைமண்ட் கேபிடலில் பணிபுரியும் தனலட்சுமி கூறுகையில், நிறுவனம் நான்கு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. முதல் மூன்று வருடங்கள் சரியான தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வருடமாக வட்டித் தொகையும், முதலீட்டுத் தொகையும் யாருக்கும் திருப்பித் தரப்படவில்லை. இதுகுறித்து காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.