மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே யானை, மயில், மான் போன்ற வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்து வரும் நிலையில், இப்போது காட்டுப் பன்றிகள் வாழை மரங்களை தாக்கி வருவது விவசாயிகளை கடும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டுப் பன்றிகள் இனி கோரை புற்களை மட்டும் உண்ணாமல், வாழை மரத்தின் அடிப்பகுதியையும் தண்டுகளையும் சேதப்படுத்துகின்றன.
குலை தள்ளிய வாழை மரங்களை கீழே தள்ளி, வாழைப்பழங்களை உண்ணும் அவற்றை எதிர்த்து நிற்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட வனவிலங்கினங்களின் பட்டியலில் காட்டுப் பன்றிகள் இருப்பதால், விவசாயிகள் அவற்றை துரத்த அச்சப்படுகின்றனர். கேரளாவில் காட்டுப் பன்றிகளை கொல்ல உரிய விதிமுறைகள் இருப்பதுபோல், தமிழகத்திலும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க பணியாற்றி வந்தாலும், காட்டுப் பன்றிகளின் தொல்லைக்கு தீர்வு காண முடியாமல் தவித்து வருகின்றனர்.