ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் போத்தனூரில் ரமலான் நோன்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக திகழ்கிறார் என்றும், மத்திய அரசால் கொண்டுவரப்படும் வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என்றும் அவர் கூறினார். மேலும், கோவை மாவட்ட சிறுபான்மை மக்கள் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பள்ளிவாசல்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 300 பள்ளிவாசல்களில் உள்ள 600 பேருக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார். கோவை நகரின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விழாவில், மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம். பி. நாகராஜன், துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், மயூரா ஜெயக்குமார், மதிமுகவை சேர்ந்த ஆர். ஆர். மோகன்குமார், கணபதி செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லா, அஷ்ரப் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.