உடுமலைப்பேட்டையை சேர்ந்த அப்பாச்சி என்பவரின் மகன் சுந்தர்ராஜ் (62) என்பவர் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டி சுந்தர்ராஜிடம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியிருக்கிறார். உடனே அந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி சுந்தர்ராஜ் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.
உடனே சுந்தர்ராஜ் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பணத்தை பறித்து செல்ல முயன்ற மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த நபரையும் அவர் வந்திருந்த காரையும் செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் செந்தில் என்கிற குண்டு செந்தில் (55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.