கோவை, சரவணம்பட்டி கார்த்திக் நகரைச் சேர்ந்த சங்கர் (45), பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் மருதம் நகர் சந்திப்பில் நின்றபோது, மணியகாரன்பாளையம் ரங்கநாதர் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்ற மெடிக்கல் சுரேஷ் என்பவர் வந்தார்.
சங்கரிடம் திடீரென ரூ. 1 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். சங்கர் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் கழுத்தில் வைத்து மிரட்டி ரூ. 500-ஐ பறித்துச் சென்றார்.
இதுகுறித்து சங்கர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ் சங்கரை மிரட்டி பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.