கோவை மாநகர போக்குவரத்து போலீசில் பணியாற்றும் காவலர்களுக்கு கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் சோலார் தொப்பி, குளிர்பானம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை - அவினாசி சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே நேற்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கலந்துகொண்டு போக்குவரத்து போலீசில் பணியாற்றும் 235 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி, குளிர்பானம் மற்றும் கண் கண்ணாடி ஆகியவற்றை வழங்கினார். கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண தொப்பியில் வெயில் படும்போது அது சூடாகி வியர்வை வெளியேறும். ஆனால் சோலார் தொப்பி எடை குறைவாக இருப்பதுடன், வெப்பம் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் வெயிலில் நின்று பணியாற்றும்போது வெப்பம் அதிகமாக தாக்காது. இதுதவிர தினமும் அவர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வு போக்குவரத்து போலீசாரின் உடல் நலத்தை பேணும் வகையில் அமைந்தது.