கோயம்புத்தூரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மணிகண்டன் (39), விநாயகம் (34), கிருஷ்ணகாந்த் (34), மகாவிஷ்ணு (28), ஆதர்ஸ் டால்ஸ்டாய் (24) , ரிதேஷ் லம்பா (41), மற்றும் ரோகன் ஷெட்டி (30) ஆவர்.
இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவிலிருந்து ஜேக்கப் பிராங்கிளின் மூலம் போதைப்பொருட்களை கடத்தி, கோவை மாநகரில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரித்தேஷ் லம்பா வைத்திருந்த செல்போனில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் இருந்தன. அவற்றை நேற்று ஆய்வு செய்தபோது மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் எண்கள் இருந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த போதை பொருள் விற்பனை வலையமைப்பில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.