கோவை மாநகராட்சி 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிதிக்குழு தலைவர் முபஷீரா பட்ஜெட்டை மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். மேயர் ரங்கநாயகி பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அறிவியல் ஆய்வகங்களில் செய்முறை பயிற்சி பெற ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் 4617. 33 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் 4757. 16 கோடி ரூபாயாகவும், நிகர பற்றாக்குறை 139. 83 கோடி ரூபாயாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.