பல்வேறு போர்களில் தனது வீரத்தை காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்த ராணுவ டாங்கி, நேற்று (ஜனவரி 29) கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் இந்த டி-55 வகை டாங்கி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் பிரார் டாங்கியை திறந்து வைத்தார்.
1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த டாங்கி, 1971 ஆம் ஆண்டு பஞ்சாப் போரில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்கிராம் உள்ளிட்ட பல்வேறு போர்களில் பங்கெடுத்துள்ள இந்த டாங்கி, 38 ஆண்டுகள் இந்திய ராணுவத்திற்கு சேவை செய்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க டாங்கியை பொதுமக்கள் நேரில் பார்த்து, அதன் வீர வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கே.ஜி. மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.