கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் முதன்மை கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று (டிச.17) நடைபெற்றது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆய்வு கூட்டம் என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தேர்ச்சி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மனஅழுத்தம் இல்லாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது தான். ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் சுமார் 2000 பள்ளிகளுக்கு யார் வேண்டுமானாலும் வந்து மாணவர்களின் கல்வித்தரத்தை சோதித்துப் பார்க்கலாம் என தலைமையாசிரியர்கள் சவால் விட்டுள்ளனர். எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் செல்ல இருக்கிறார்கள், பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு தனியார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது பெரும்பாலும் தவறாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழக அரசு. செயற்கை நுண்ணறிவை அடுத்த கல்வியாண்டில் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.