கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025–26 கல்வியாண்டுக்கான பாடபுத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு நேற்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். இதுபோன்ற புகார்கள் கிடைத்ததை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவ்வாண்டு, கடந்த ஆண்டுகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. சேர்க்கை ஜூன் மாத இறுதி வரை நடைபெறும் எனவும், ஒரு மாதத்திற்குள் முழுமையான மாணவர் எண்ணிக்கை வெளிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோவையில் தற்போது கொரோனா பரவல் அபாயம் இல்லையெனினும், மருத்துவமனைக்கு செல்லும் பொழுது முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.