உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி திருவிழா, அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பூஜை செய்யப்பட்ட மலர் மாலை, கோவில் தலைமை குழுக்கள் சீனிவாசா ஐயங்கார் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகி ராஜா ராமச்சந்திரன் தலைமையில் பக்தர்களால் வரதராஜ பெருமாளுக்கு சாத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர். இதையடுத்து நடைபெற்ற உற்சவர் திருவீதி உலாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.
குறிப்பாக, இஸ்லாமியப் பெருமக்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய அறங்காவலர் குழு நிர்வாகி ராஜா ராமச்சந்திரன், கோவை நகரம் செழிக்கவும், அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டி வழிபட்டது எங்களுக்கு பெருமை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.