சென்னை எண்ணூரை சேர்ந்தவர் சீனிவாசன் (45). இவருக்கு கோவை இடிகரையில் வசிக்கும் ஷியாம் (எ) ஜாய் மோகன் (44) மற்றும் அவரது மனைவி சஜிதா ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது இருவரும் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய சீனிவாசன் இரிடியம் வாங்க அவர்களிடம் ரூ. 10 லட்சம் கொடுத்தார். இந்நிலையில், ஷியாம் மூலம் சீனிவாசனுக்கு வருண் பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண் குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் அந்த இரிடியத்தை வெளிநாட்டில் பல கோடிக்கு விற்று தருவதாக கூறி அதற்கு முன் பணமாக சீனிவாசனிடமிருந்து ரூ. 15 லட்சம் பெற்றனர். ஆனால் அவர்கள் கூறியபடி இரிடியத்தை தரவில்லை. மேலும் அதனை வெளிநாட்டில் விற்று தருவதாக பெற்ற ரூ. 25 லட்சத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். சீனிவாசன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இரிடியம் விற்பதாகவும், அதனை வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்று தருவதாகவும் கூறி ஏமாற்றிய கேரளாவை சேர்ந்த ஷியாம் (எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவி சஜிதா (38) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரிடியம், ரூ. 4. 99 லட்சம் ரொக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.