கோவை மாவட்டம், அச்சம்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றியதால் வடமாநில தொழிலாளி மெஷினில் சிக்கி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் முகன்யா என்ற வடமாநில தொழிலாளி, ஸ்ரீ ஹரி இண்டஸ்ட்ரியல் என்ற தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். கிரைண்டிங் பகுதியில் பணி செய்து வந்த அவர், அந்த ஆபத்தான பணிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வசதிகள் இன்றி பணியாற்ற வைக்கப்பட்டதாக தெரிகிறது. விபத்தின் போது, மிதுன் முகன்யா திடீரென தவறி கிரைண்டிங் மெஷினில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.