கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: - நான் ஆவாரம்பாளையம், ஜி என் மில்ஸ் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தேன். இங்கு வாடிக்கையாக வரும் கோவையை சேர்ந்த சுரேஷ்(38), என்பவர் மாதம் தோறும் ரூ. 4 லட்சம் தர வேண்டும், இல்லையென்றால் போலீசார் மூலம் தொந்தரவு செய்வேன் என மிரட்டினார்.
இதனால் நான் மாதம் தோறும் அவரது கூகுள் பே எண்ணிற்கு ரூ. 4 லட்சம் அனுப்பி வந்தேன். இதற்கிடையே எனது தோழி ஒருவரின் மகனுக்கு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சீட் வாங்கி தர சுரேசை அணுகியபோது, அவர் ரூ. 15 லட்சம் செலவாகும் என கூறி எனது தோழியிடம் ரூ. ஐந்து லட்சம் பணம் பெற்றார்.
ஆனால் அவர் சொன்னபடி சீட் வாங்கி தராமல் மீண்டும் பணம் கேட்டு எங்களை மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், போலீசார் சுரேஷ் மீது நம்பிக்கை மோசடி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.